தமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்தி

அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“தமிழீழத் தாயகத்தின் மூச்சுக்காற்றெங்கும் நிறைந்திருக்கும் எம் விடுதலை நாயகர்களின் பெருநாள். தமிழீழ மக்களின் விடுதலைக்காய் வீரச்செருக்கோடு களமாடி மண்ணில் விதையாய் வீழ்ந்த எம் வீர மறவர்களை எம் மக்கள் தமது இதயக்கோவிலில் இருத்திப் பூசிக்கும் நன்னாள்.

தமிழீழ தேசத்தின் தேசிய எழுச்சியையும், சுதந்திர வேட்கையினையும் உலகறியச் செய்து தமிழர் தேசத்தின் மனச்சாட்சியாய் ஆழ வேரோடியிருக்கும் புனித நாயகர்களின் நினைவு நாள்.

மாவீரர்களது ஈகத்தால் எம் மண் சிவந்திருக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க ஈழத்தாய்தன் வயிற்றிலிருந்து கிளர்த்தெழுந்து எம் மண்ணுக்காய் உயிர் ஈந்தவர்களின் அக்கினிமூச்சினால் எமது தாயகம் தகித்துக் கொண்டிருக்கிறது.

இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசு ஒன்றே தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்பதில் பற்றுறுதி கொண்டு எமது மாவீரர்கள் களமாடினர்.

தமிழீழ மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, சிங்களத்தின் இனஅழிப்புக்கு உள்ளாகாது வாழ்வதற்கான வாய்ப்பினைத் தமிழீழத் தனியரசினை அமைப்பதன் மூலமே அடையலாம் என்ற தொலைநோக்குடன் மாவீரர்கள் களமாடினர்.

சாதிகள் அகற்றப்பட்ட, ஆண்-பெண் சமத்துவம் நிறுவப்பட்ட, சமூக ஏற்றத்தாழ்வுகள் விலக்கப்பட்ட, இயற்கைச்சூழற் பாதுகாப்பில் அக்கறை கொண்ட, சமூக நீதி நிலவுகின்ற சமூகமொன்றைப்படைக்கும் உன்னத இலட்சியத்துடன் மாவீரர்கள் களமாடினர்.

தமிழீழ மக்களின் இறைமையைப் பாதுகாக்கப் போரிட்ட எம் மாவீரர்களின் உன்னதமான போராட்டம் எமது தேசத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

மாவீரர்கள் விட்டுச் சென்ற வழித் தடங்கள் நாம் சென்றடைய வேண்டிய இலக்கை எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.

மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வணக்கம் செய்யும் இன்றைய நாளில் அவர்களுக்குத் தலைவணங்கி அவர்களின் கனவுகளை எம்முள்ளே உள்வாங்கி உறுதி எடுத்துக் கொள்வோம்.

அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என்பது தெளிவாகும்.

உரிமைகளுக்காக விட்டுக் கொடுப்பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்து வாழ்தல் ஒரு தெரிவு. இத் தெரிவில் வெற்றியடைவதற்கான நடைமுறைச் சாத்தியம் குறைவு என்று ஐயம் கொள்வோர் பலருண்டு.

மற்றைய தெரிவு சிங்கள இனவாதத்துக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ எமது அடிப்படைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்து, இறுதியில் சிங்களப் பெருந் தேசியத்துக்குள் காலப்போக்கில் கரைந்து போவது.

முதலாவது தெரிவில் நாம் வெல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஒடுக்குமுறையை எதிர்த்துநிற்கும் எதிர்ப்பு உணர்வினை தணியாமல் காத்து எமது போராட்டத்தைச் செவ்வனே பேணிக் கொள்ளும்வரை நாம் தோல்வியடைந்தவர்களாகப் போய்விட மாட்டோம். சரியானதொரு சந்தர்ப்பத்தில் வெற்றிக்கான வாய்ப்பும் போராட்டத்தைத் தளராது தொடரும்போது மட்டுமே கிடைக்கும்.

இரண்டாவது தெரிவு தமிழ் மக்களுக்கு மிகவும் அவமானகரமான தோல்வியையே தேடித் தரும். எம்மால் எதுவும் முடியாது என்று சரணாகதியடையும் நிலைக்கு இட்டுச் செல்லும். சிங்கள மேலாதிக்கத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டு அடிபணிந்து வாழும் இழிநிலைக்கு எம்மை இட்டுச் செல்லும். இந் நிலை ஏற்படின் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நிரந்தரமாகத் தோல்வியடைந்த மக்களாக மாறிவிடுவார்கள்.

இந்த இழிநிலை தமிழ் மக்களுக்கு ஏற்படாது காக்கும் காவல் தெய்வங்களாக எமது மாவீரர்கள் இருப்பார்கள் என்பது எமக்கு நம்பிக்கை தரும் விடயமாக இருக்கிறது.

தமிழ் மக்கள் ஒவ்வாருவரினதும் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பியவாறு மாவீரர்கள் எம்மை வழிநடாத்துவார்கள். தமிழ் மக்களின் போராட்டம் வழிதவறிப் போகாதவாறு எமக்கான காப்பரணாக மாவீரர்கள் இருப்பார்கள்.

மாவீரர்களுக்கு நாம் செய்யும் வணக்கம் இவர்களது கனவுகளை நனவாக்க உழைப்பதாகத்தான் இருக்க முடியும் என்ற உணர்வுடனும் உறுதியுடனும் செயற்படுவோமாக.”

Related Posts