முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுவதாக தெரிவித்து தண்ணிமுறிப்பு கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு கவனயீர்ப்பிலும் ஈடுபட்டது.
இதன்போது வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம், பிரிக்காதே பிடிக்காதே தமிழர் தாயகத்தை பிரிக்காதே, குருந்தூர் மலை எங்கள் மலை, அநீதி இழைக்கும் தொல்லியல் திணைக்களமே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், சர்வதேச நீதி வேண்டும், தமிழர்களின் மதவழிபாட்டு உரிமையை தடை செய்யாதே, அடாவடி தொல்லியல் திணைக்களமே வெளியேறு, ஆதிசிவன் தமிழர்களின் சொத்து என்றவாறு கோஷத்தை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
காலங்காலமாக தமிழர் பிரதேசத்தில் நில அபகரிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.இவ்வாறான தமிழரின் உரிமை மீறல்களை பொதுமக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள் எந்தவித பாகுபாடின்றி இணைந்து செயற்பட்டு, தொடரும் இந்த உரிமை மீறலை நிறுத்த வேண்டும்.
சர்வதேசம் இவ்வாறான அரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.
நீதிமன்றத்தால் குருந்தூர் மலையில் விகாரைக்கான நிர்மாண பணிகளை முன்னெடுக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் இங்கு வந்து பார்க்கின்ற பொழுது சீமெந்து வேலைப்பாடுகள் இடம்பெறுகின்றன. நீதி மீறப்படுகின்றது.
இச்செயற்பாடுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெல்சின், யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார், பல்கலைக்கழக மாணவர்கள், தவத்திரு வேலன் சுவாமிகள், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் முருகையா கோமகன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.