தமிழர்களின் குருதியில் குளிர் காய்ந்த மாவை. இன அழிப்பு குறித்துப் பேசலாமா? விந்தன் கேள்வி

தமிழ் பேசும் மக்கள் குருதியில் நனைந்தழிந்த கொடுந்துயரில் குளிர்காய்ந்து அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜா இன்று இன அழிப்பு என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மக்களையும் உலகத்தையும் ஏமாற்றவே என ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

vinthan

வறிய மக்களது வாழ்வாதாரத்தையும் அவர்களது இதர தேவைகளையும் மேம்படுத்திக் கொள்வதற்கான நல்லூர்ப்பகுதி சமுர்த்தி உத்தியோகத்தரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அழிவு யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம் பெயர் நாடுகளில் பதுங்கியிருந்தார்கள். கூட்டங்களை நடத்தினார்கள். அங்குள்ள மக்கள் கேள்விகள் கேட்டார்கள். எல்லா நாடுகளிலும் உரிமைப்போராட்டம் நடந்து விடுதலையும் கிடைத்துவிட்டது. எமக்கு மட்டும் ஏன் இதுவரை கிடைக்கவில்லை?…. இவ்வாறு புலம் பெயர் மக்கள் கேட்ட போது எமது மக்கள் இன்னமும் அழிந்தது காணாது என்றும் எந்தளவுக்கும் இன்னும் அழிவுகள் அதிகமாகின்றதோ அந்தளவுக்கு விடுதலையும் விரைவாகக் கிடைக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதிலளித்திருந்தனர். தாமும் தத்தமது குடும்பங்களும் உலக நாடுகளில் உல்லாசமாக வாழ்ந்துகொண்டு அப்பாவி மக்கள் மட்டும் செத்தழிய வேண்டும் என்று விரும்பியவர்களே இவர்கள். இந்த வக்கிரபுத்தி படைத்த ஈனப்பிறவிகளா இன அழிப்புப் பற்றி பேசுகிறார்கள்?

யுத்த காலத்தில் விடிந்தால் வெடிகுண்டுச்சத்தம் கேட்குமோ என்ற ஏக்கத்தில் அப்பாவி மக்கள் விழித்துக் கொள்வார்கள், ஆனாலும் விடிந்ததும் எத்தனை பிணங்கள் விழுகின்றதோ அத்தனை பிணங்களிலும் ஏறிநின்று ஆனந்தக்கூத்தாடியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இப்போது மனிதப் பிணங்கள் விழவில்லை என்று தழிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஆழ்ந்த கவலை. அந்தக் கவலை மாவைக்கும் உண்டு.

ஆகவேதான் அழிவுகள் இன்று இல்லை என்றாலும் அப்பாவி மக்கள் அவலங்களையாவது சுமக்கவேண்டும் என்று மாவை சேனாதிராசா விரும்புகின்றார்.

தமது உறுப்பினர்களை தூண்டிவிட்டு மக்களின் அவலங்களை தீர்க்கும் எமது வாழ்வெழுச்சித்திட்டங்கள் மீது அவதூறுகளை பொழிந்து வருகின்றார். வாழ்வெழுச்சித்திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களில் குடிகொண்டிருக்கிறது.

மாவையின் அகிம்சை கோழிகள் கொக்கரித்து பொழுது விடியப்போவதில்லை. உரிமையை பெற்றுக்கொள்ள மதிநுட்ப சிந்தனையை பயன்படுத்த வேண்டிய காலமிது. ஆனாலும் அகிம்சை போராட்டம் நடத்துவதற்கு காலக்கெடு விதித்துள்ளார் மாவை. இவர் நடத்தப்போகும் அகிம்சைப்போரில் உலகநாடுகளில் உல்லாச படகோட்டும் இவரது பிள்ளைகள் வந்து முதலில் முகம் காட்டட்டும். அதற்குப் பிறகு அடுத்தவர் பிள்ளைகளை போராட்டக்களம் நோக்கி அழைக்கட்டும்.

77ல் வெறும் தேர்தல் வெற்றிக்காக தனி நாட்டுக் கோரிக்கையை வைத்து அடுத்தவர் பிள்ளைகளை உசுப்பேற்றி வீதிகளுக்கு அழைத்தார்கள். தாம் மட்டும் குடும்பங்களோடு தப்பிச்சென்று தமிழ் நாட்டில் தனிவீடு பெற்றுக்கொண்டார்கள். மீண்டும் மக்களை அழியக்கொடுத்துவிட்டு தப்பியோடவா மாவை நினைக்கின்றார்.

உரிமைப் போராட்டத்தில் மாவையரின் குடும்பத்தில் ஒருவராவது பலியாகி இருக்கின்றார்களா? இதற்கு பதில் சொல்லிவிட்டு மாவையர் குடும்பத்தோடு வந்து களத்திலிறங்கட்டும். மாவிலை தோரணம் கட்டி வரவேற்போம்.

Related Posts