தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் பழையவற்றை எரித்துக்கழிக்கும் போகிப்பண்டிகையை வெகுசிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதேபோன்றுதான் நாமும், பொங்கலுக்கு முதல் வந்த தேர்தலில் பழைய ஜனாதிபதியை எமது வாக்குகளால் எரித்துப் பொசுக்கி அதிகாரத்தில் இருந்து களைந்திருக்கிறோம்.
புதிய அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை முன்வைக்கத் தவறினால் நாம் இன்னுமொரு போகியைக் கொண்டாடவேண்டிவரும். என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (03.02.2015) கிளிநொச்சி அக்கராயன், ஸ்கந்தபுரத்தில் நடைபெற்ற புதிர் எடுத்தல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள். தமிழர்களின் பிரதான தொழிலான உழவுத் தொழிலுக்கு உதவி செய்த இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும், உழவுத் தொழிலுக்கு முக்கியமான உயிர் இயந்திரங்களாகத்தொழிற்படும் காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
நன்றியுணர்வு மிக்க எமக்குப் புதிய அரசாங்கம் நன்றி உடையதாக இருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சமீது தமிழ் மக்கள் கொண்ட வெறுப்பே, புதிய அரசாங்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. புதிய அரசாங்கம் மட்டுமல்ல, மேற்குலகமும் எமக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். மகிந்த ராஜபக்ச தலைமையில் அல்லாத புதிய அரசு ஒன்று இலங்கையில் தோற்றம் பெறவேண்டும் என்ற தேவை அவர்களுக்கு உள்ளது.
இலங்கை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஈழத்தமிழர்கள் உள்ளார்கள் என்பது நடந்து முடிந்த தேர்தலில் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், புதிய அரசாங்கம் எங்களுக்கு எல்லாம் தந்துவிடும் என்று இலவு காத்த கிளிகளாக நாம்இருந்துவிடக்கூடாது.புதிய அரசாங்கமும்,இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாகவேண்டும் என்று காத்திருந்த சர்வதேசமும் நன்றி மறந்தவர்களாக எமது தேசிய இனப் பிரச்சினைக்குச் சரியான தீர்வை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் நாம் ஜனநாயரீதியில் போராடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் நாம்அனைவரும் ஒன்றுபட்டுப் பேணிய ஐக்கியத்தைத் தொடர்ந்தும் பேண வேண்டியது அவசியம் என்றும்தெரிவித்துள்ளார்.
இப்புதிர்எடுத்தல் விழாவில் நாடளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் நாவை குகராசா ஆகியோரும் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.