தமிழர்களின் இன்றைய வறுமைக்கு இராணுவப் பொருளாதாரமே காரணம் – பொ.ஐங்கரநேசன்

இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது.

ainkaranesan

நாம் இப்படி வறுமையில் உழல, தென் இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைவடைந்திருக்கிறது. தென் இலங்கைக்கும் – வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே நிலவுகின்ற பொருளாதார ரீதியான இந்த ஏற்றத்தாழ்வுக்கு இராணுவப் பொருளாதாரமே காரணம் என்று வடக்கின் விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் வட்டக்கச்சி மாயவனூரில் நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2014) புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் சனத்தொகையில் 26.3 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்துள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை இப்போது 8.9 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இதற்கு, தென்இலங்கையில் வேலைவாய்ப்பில்லாமல் இருந்த கிராமப்புற ஏழைச் சிங்கள இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் மிக அதிகஎண்ணிக்கையில் இராணுவத்தில் வேலை வழங்கப்பட்டதும் ஒரு காரணம் என்று பொருளியல் அறிஞர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

தென் இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது மானுடநேயத்தின்பாற்பட்டு வரவேற்கக்கூடிய ஒன்றே. ஆனால், இந்த இராணுவப் பொருளாதாரம் தான் செல்வச் செழிப்போடு வாழ்ந்த எமது மக்களின் இன்றைய இழிநிலைக்கும் வறுமைக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

இதே இராணுவம் தான் போர்க்காலத்தில் எமது பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியது. போருக்குப் பிறகும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறது. போரின்போது அதிக எண்ணிக்கையில் உள்வாங்கப்பட்டு களமுனைகளில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்துக்கு இப்போது இருப்பதற்கு இடம் தேவையென்று எமது நிலங்கள் சுவீகரிக்கப்படுகின்றன. பொது மக்களின் காணிகளில் மாத்திரம் அல்லாமல் எமது விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான பண்ணைகளிலும் இராணுவம் நிலை கொண்டுள்ளது. வட்டக்கச்சியில் விவசாயப் பண்ணையில் இருக்கும் இராணுவம் வெளியேறுமாக இருந்தால் நூற்றுக்கணக்கான வறிய மக்களுக்கு அங்கு எம்மால் வேலை வழங்க முடியும்.

இராணுவத்தினரை ஓய்வில் வைத்திருக்க விரும்பாத அரசாங்கம் இப்போது அவர்களைத் தொழில் முயற்சிகளிலும் ஈடுபடுத்தியுள்ளது. சந்தைகளில் எமது விவசாயிகளுக்குப் போட்டியாகப் படையினரும் தங்கள் உற்பத்திகளைக் கொண்டு வருகிறார்கள். இராணுவத்தினர் பிற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எமது மக்களின் வருவாயைப் பாதிக்கின்ற ஒரு விடயமாகவே உள்ளது.

அரசு போருக்குப் பிறகு வடக்கிலும் கிழக்கிலும் எவ்வளவோ அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறிவருகிறது. ஆனால், இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களில் வடக்குக் கிழக்கிலேயே அதிகமானோர் இருக்கிறார்கள்.

இலங்கை அரசு மாதமொன்றுக்கு 3,028 ரூபாவுக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்களையே வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள் என்று வகைப்படுத்தியிருக்கிறது.

இதன்படி, நாளொன்றுக்கு 100 ரூபா சம்பாதிக்க முடியாதவர்கள் வடக்கிலும் கிழக்கிலுமே அதிகம்பேர் உள்ளார்கள். இது, அரசியல் சுதந்திரம் இல்லாமல் அபிவிருத்தியோ, அதனூடாகப் பொருளாதார மேம்பாடோ சாத்தியப்படாது என்பதையே காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி
32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்

Related Posts