“தமிழ்த் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிறது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு. பிரித்தாளும் தந்திரத்தையும் தமிழர்கள் மத்தியில் அது கையாள்கிறது” என்று நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறினார் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா.
பிரித்தாழும் சூழ்நிலையை அரசு தமிழர்களிடையே தொடர்ந்து வளர்த்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். “தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறை’ என்ற தலைப்பில் யாழ். பொது நூலகத்தில் ஜே.வி.பி. கூட்டம் ஒன்றை நடத்தியது.
அதில் ஜே.வி.பியின் செயலாளர்ரில்வின் சில்வா கலந்துகொண்டு உரையாற்றினார். “இந்த அரசு நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் வடக்கில் உள்ள மக்கள் இன்றும் கவலையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் ரில்வின் சில்வா.
“தென்பகுதி இனவாத நிகழ்வு போன்று வடக்கிலும் தற்போது இனவாதம் தூண்டப்படுகிறது. இது மீண்டும் அழிவுக்கே இட்டுச் செல்லும். முன்னர் ஐரோப்பியர்கள் பிரித்தாளும் கொள்கையைக் கைக்கொண்டிருந்தனர். அதனைச் சுதந்திரத்துக்குப் பின்னர் அரசு பின்பற்றி வருகிறது.” என்றார் அவர். “வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை. சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம்” என்றும் அவர் மேலும் கூறினர்.