இலங்கை தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மாநகரசபை ஆணையாளருமான சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கண்மூடித்தனமான கல்வீச்சு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
நேற்றிரவு இரவு 11.45- 12மணி வரையான 15 நிமிட இடைவெளிக்குள் பொலித்தீன் பைகளில் பாரிய கற்களைக் கொண்டுவந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதில் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஒடுகளும் முழுமையாக சேதமடைந்திருக்கின்றன. குறித்த சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் சீ.வி. கே.சிவஞானம் ஜன்னல் அருகில் உள்ள கணனியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
இதன்போது கல்வீச்சினால் உடைந்த ஜன்னலின் கண்ணாடி துண்டு ஒன்று அவரது மூக்கில் காயம் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்தும் கற்கள் வந்துகொண்டிருந்த நிலையில் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதன் பின்னரே அயலில் இருந்தவர்களும் வீதி விளக்குகளை ஒளிரவிட்டு உஷாரடைந்துள்ளனர். இதன் பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
எனினும் குறித்த தாக்குதல் சம்பவம் மாகாணசபை தேர்தலை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொதுவான கருத்து யாழில் நிலவுகின்றது.
மாகாணசபை தேர்தலில் ஏனையவர்கள் போட்டியிடுவது தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவுமில்லாத நிலையில், சீ.வீ.கே.சிவஞானம் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் முதற்கட்ட இலக்காக சிவஞானம் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த கருத்துக்கள் மேலும் தெரிவிக்கின்றன.