தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும்!! : சுரேஷ் பிரேமசந்திரன்

“புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் (வீட்டுச் சின்னம்), தேர்தலில் போட்டியிடவும் முடியாது” என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொது நூலகத்தில் நேற்று (12) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

“தமிழரசுக் கட்சி, மக்களின் ஆணையை முழுமையாக உதாசீனம் செய்துவிட்டது. அதனால் புதிய முன்னணியின் அவசியத்தை, ஈ.பி.ஆர்.எல்.எப் கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகின்றது. அதனை இன்று, அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

“வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களையே, தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டது. அதனால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க, புதிய முன்னணியும் புதிய தலைமையும் தேவை எனும் விடயம், இன்று அனைவராலும் உணர்ந்து கொள்ளப்பட்டு உள்ளது.

“இந்தக் கூட்டத்தில் வந்த அனைவரும், அதனை ஏற்றுக்கொண்டு உள்ளனர். தமிழரசுக் கட்சி, இன்று நேற்று அல்ல, நீண்ட காலமாக எதேச்சாதிகாரமாக முடிவெடுத்து வருகின்றார்கள்.

“கூட்டமைப்பில், இணைந்து முடிவெடுப்பதில்லை ஒரு சிலரே முடிவெடுத்து விட்டு, அதனை மற்றவர்களுக்குத் திணிக்கின்றார்கள்.

“ஒற்றையாட்சியை ஏற்றுகொள்ள கூடிய சம்பந்தன் மாதிரியான தலைவர், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இனி வர மாட்டார் என, பெரும்பான்மையினத் தலைவர்கள் பாராட்டும் நிலையில் தான், சம்பந்தன் இருக்கின்றார்.

“அந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க, புதிய கூட்டணி உருவாக உள்ளது. அது, பொதுச் சின்னத்துடன், பொதுப் பெயருடன், காலத்தின் தேவைக்காக உருவாகும்” என்று தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணி எனும் விடயத்தில், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவருமான சி.வி. விக்னேஸ்வரன், அவ்வளவுக்கு ஆர்வமற்ற நிலையிலேயே காணப்படும் நிலையில், முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பாகவும், சுரேஷ் கருத்துத் தெரிவித்தார்.

“வடமாகாண முதலமைச்சருக்கு, எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும் விருப்பமும் ஆதங்கமும் இருக்கலாம். அது தவறும் இல்லை. அது அவர் விருப்பம்” என்று தெரிவித்தார்.

Related Posts