தமிழரசுக் கட்சியின் வாலிபர் முண்ணணி மாநாட்டில் கட்சியின் காங்கேசன்துறை வாலிப முண்ணணியின் தலைவர் கந்தசாமி மயூரதன் ஆற்றிய உரை
தமிழ்த்தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பெனும் விடயப்பரப்பில் சிந்தனை ஓட்டத்தை செலுத்துகின்ற போது நம்முடைய ஞாபகத்திற்கு பல கனதியான விடயங்கள் வந்து சேருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி என்பது தமிழர்களுடைய ஒரு தனித்துவ அடையாளமாகவும், நீண்ட வரலாற்று பின்னணியையும் கொண்ட ஒரு அரசியல் கட்சியாகும். ஈழத் தமிழர்களுடைய அபிலாசையை எந்நேரமும் எப்போதும் பிரதிபலிக்கின்ற நோக்குடன்ட தன்னுடைய நாமத்தில் கூட தமிழ்அரசு எனும் பதத்தை தாங்கிய வண்ணம் பயணிக்கின்ற ஒரு கட்சியாகும். விசுவாசமாக, தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை அணுகுகின்ற நீண்டகால பாரம்பரிய செழுமையைக் கொண்ட ஒரு கட்சியாக தமிழரசுக் கட்சியை நாங்கள் பார்க்கின்றோம். அத்தகைய கட்சியின் இந்த இளைஞர் மாநாட்டிலே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களுடைய வகிபாகம் அல்லது பங்களிப்புத் தொடர்பாக பேசக்கிடைத்த இந்த தருணத்திற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமென்பது நாங்கள் நினைப்பது போல நம்முடைய கண்ணுக்கெட்டிய தூரம்வரை அல்லது நாங்கள் கடந்து வந்திருக்கக்கூடிய ஒரு சிறிய காலத்தில் ஆரம்பித்தது கிடையாது. எப்பொழுது இம் மண்ணிற்குள் அதாவது 1505ம் ஆண்டில் இலங்கை தேசம் முதன் முதலாக அந்நியர்களுடைய ஆதிக்கத்துக்குள், காலணித்துவ ஆட்சிக்குள் சிக்குப்பட்டது தொடக்கம் பின்னர் இறுதியாக ஆங்கிலேயருடைய கரங்களில் கண்டி இராச்சியம் வீழ்ச்சிபெற்று இலங்கைத் தேசம் முழுவதையும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து அதன் பின்னர் 1948ம் ஆண்டு ஆங்கிலேயர் இந்த மண்ணைவிட்டு வெளியேறுகின்ற காலப்பகுதியில் கூட ஈழத் தமிழர்களுடைய சுயராச்சியங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்கள் தொடக்கம் தமிழ்த்தேசியம் எனும் பேசுபொருள் எங்கள் அரசியல் சித்தாந்தத்தில் பதியப்பட்டது.
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது இந்த மண்ணில் தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழலாமென்கின்ற நம்பிக்கை அன்றைய தமிழினத்தின் பெரும் தலைவர்களான சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் போன்றோர்க்கு இருந்தது. அந்த நம்பிக்கையினால், அவர்கள் ஆங்கிலேயர் இம் மண்ணை விட்டு வெளியேறும் போது நமக்கான ஒரு தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்காது ஒதுங்கிக் கொண்டார்கள். அதே காலப்பகுதியில் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் எனும் அந்த நாட்டை உருவாக்குவதிலே அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் தனிநாடாக பிரிந்துபோனது. ஆனால் ஒரு சிறிய தேசத்தை இரண்டு துண்டாக்கிவிடக் கூடாதென்ற பெரும் மனதாலும் ஒன்றாக வாழலாம் எனும் நம்பிக்கையோடும் தமிழ்த் தலைவர்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். ஆனால் காலம் அதை தலைகீழாக மாற்றிப் போட்டது.
இந்த தேசத்தில் நாம் இரண்டாம் கட்ட பிரஜைகளாக நடத்தப்படுகின்ற வரலாறு ஆரம்பித்து பின் தொடர்ந்தது. தமிழர்களுக்கான உரிமைகள் அபகரிக்கப்பட்டு மறுதலிக்கப்பட்டது. இந் நிலையில் பல்வேறு தளங்களிலும் தமிழர்கள் தங்களுடைய எதிர்ப்புணர்வுகளை பிரதிபலிக்கத் தொடங்கினார்கள். அவ்வாறான எதிர்ப்புணர்வுகளை பிரதிபலிக்கத் தொடங்கியபோது இரண்டு தளங்களில் எங்கள் பயணங்கள் ஆரம்பிக்கத் தொடங்கியது. தமிழ் இளைஞர்கள் மிதவாதம், தீவிரவாதம் என இரண்டு தளங்களிலுமே; சுதந்திரப் பாதைக்கான தங்களது தடங்களைப் பதித்துக் கொண்டார்கள்.
இன்றைக்கு எங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் கௌரவத்திற்குரிய மாவை. சேனாதிராஜா அவர்கள் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் செயலாளராக மிதவாதப் பாதையில் தன்னுடைய தடங்களை பதிக்கத் தொடங்கினார். அவரது காலத்திலே சாமாந்தரமாக இன்னும் பலர் தீவிரவாத போக்கில் தங்களது தடங்களை பதித்து பயணிக்கத் தொடங்கினார்கள். இப்படியாக இரண்டு தளங்களிலே தமிழ்த்தேசியம் சார்ந்த இளைஞர்களின் பங்களிப்பானது தடம்பதித்து பயணித்தபோது 1980 களிற்கு பின்னர் தமிழ்த்தேசியத்துக்கான இளைஞர்களின் பங்களிப்பு என்பது ஜனநாயக அரசியலில் இருந்து முற்றாக திசைமாறி ஆயுதப்போராட்ட அரசியலுக்குள் வலுக்கட்டாயமாகவோ அல்லது காலத்தினுடைய நியதியினாலோ கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக இளைஞர்களை உள்ளடக்கிய பல்வேறு விடுதலைப்போராட்ட அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. ஆனால் காலக் கொடுமையினால் அவை சரியான தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைக்கப்படாத பலவீனத்தால் மிக ஆற்றல்மிக்க, ஆளுமைமிக்க, பேராண்மை கொண்ட பல இளைஞர்களுடைய அந்த அர்ப்பணிப்பும், ஆற்றலும், அளவுகடந்த அறிவுநுட்பமும் வீணாகிப்போய் பேரழிவைச் சந்தித்து இந்த அல நிலையில் வந்து நிற்கின்றது.
2009களோடு இளைஞர்களின் தமிழ்த்தேசிய தீவிரவாதப் பங்களிப்பு மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் தமிழ்த்தேசிய அரசியலிலே இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின. முப்பது ஆண்டு கால ஆயுதப் போராட்டத்திலே தங்களுடைய முழுமையான வீரியத்தையும் அர்ப்பணித்திருந்த இளைஞர்கள் அதற்கு பின்னர் 2009ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு ஜனநாயக அரசியலுக்குள் மெதுவாக பிரவேசிக்க தொடங்கினர். பாராளுமன்ற தேர்தலில், உள்ளுராட்சி சபைத் தேர்தலில், மாகாண சபைத் தேர்தலில் என பல்வேறு தேர்தல்களினூடாக வந்து இன்று இந்த மண்டபம் நிறைந்த விதத்திலே மக்களுடைய பிரதிநிதிகளாக இளைஞர்கள் இன்று தமிழ்த்தேசிய அரசியலில் பங்குபெறுகின்றார்கள் என்றால் அது வரவேற்கத்தக்கது.
இருந்தும் அத்தகைய பாதையில் பயணித்து இன்று உங்கள் முன்னிலையில் இந்த உரையை ஆற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் என்ற அடிப்படையில், இந்த இளைஞர்களின் தமிழ்த்தேசிய அரசியல் பங்களிப்பு சம்பந்தமாக எனது அவதானிப்புக்களையும், எனது மனக்குறைகளையும் பதிவு செய்வதற்கும் நான் ஆசைப்படுகின்றேன். இன்றைய சூழ்நிலையிலே அரசியல் என்பது ஒரு அடையாளமாகவும், அரசியல் என்பது ஒரு கௌரவமாகவும், அரசியல் என்பது மக்கள் மீது தமக்கான ஒரு மதிப்புணர்வை ஏற்படுத்துவதுமான ஒரு கருவியாக இன்றைய இளைஞர்கள் சிலர் பாவிக்க நினைப்பது மனவேதனைக்குரியதாக இருக்கின்றது.
ஆனாலும் அதைக்கடந்து மக்களுக்கென்று சேவை செய்வதற்காகவும் தமிழ்த்தேசியத்தை காப்பாற்றுவதற்காகவும் தமிழ்த்தேசியத்தை அடுத்த தளத்திற்கு உயர்த்திச் செல்வதற்குமான ஒரு வாய்ப்பாக இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும்.
நம்முடைய மண்ணிலே இன்றிருக்கக்கூடிய தமிழ்த்தேசிய அரசியலில் இருக்கக்கூடிய கணிசமான இளைஞர்கள் தமிழத்தேசிய அரசியலின் உள்ளார்ந்த சித்தாந்தங்களை புரிந்து கொள்ள தவறுகின்றவர்களாக அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காதவர்களாக இருப்பது மனவேதனைக்குரியதாகவிருக்கின்றது.
இதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிடமுடியும் இன்றிருக்கக்கூடிய தமிழ்த் தலைவர்களில் யார் தமிழ் மக்களிற்கு தனித்தலைமையாக திகழ்வதென்பது தொடர்பாக குறைபாடுகளும் முரண்பாடுகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றது. அந்த நிலைமையில் இன்று தமிழ் மக்களிற்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளில் முக்கிய மூன்று பிரச்சினைகளை அடையாளப்படுத்துகின்றோம். அந்தப் பிரச்சினைகளில் ஒன்று இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களை மீட்பது, இரண்டு அரசியல் கைதிகள் எனும் போர்வையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மீட்பது, மூன்றாவது காணமால் போக செய்யப்பட்டோருக்கு ஒரு பதிலைப் பெற்றுக்கொடுப்பது. இந்த மூன்று விடயங்களுக்கும் தீர்வு காணுகின்ற தலைவர் தமிழ் மக்களின் தேசியத் தலைவராக, தமிழ் மக்களின் தனித் தலைவராக அங்கீகரிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.
ஆனால் நாங்கள் ஒரு உண்மையை மறந்து விடுகின்றோம். இதுதான் தமிழ் மக்களுடைய உண்மையான பிரச்சினையாயெனக் கேட்டால் இன்றைக்கு பல இளைஞர்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல தமிழ் மக்களிற்கான பிரச்சினை ஒன்று இருக்கிறதுக்கு என்பதற்குப் பின்னால் தந்தை செல்வா தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரை ஆரம்பித்த போராட்டத்தின் விளைவுகளினால் ஏற்பட்ட பின் விளைவுகள் தான் இந்த காணமற்போகச் செய்யப்பட்டவர்களும், அரசியல் கைதிகளும், காணிகள் கையகப்டுத்தப்பட்டமையும். எனவே மூன்று பிரச்சினைகளும் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழர்களுக்கு ஏதோவொரு பிரச்சினை இருந்திருக்கிறது என்பதை நம் இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது உணர்ந்துகொள்ள வேண்டும். அதுதான் உண்மையான தமிழ்த்தேசியத்தின் மையப்பொருளையும் தமிழ்த்தேசியத்தின் கருப்பொருளையும் விளங்கிக்கொள்வதற்கான ஏற்பாடாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்திலே இந்த இளைஞர்களுடைய பிரதிநிதியாக தங்களுடைய வாழ்க்கையை அரசியலில் ஓர் அங்கமாகக் கொண்டு பயணிக்கின்ற இளைஞர்களின் பிரதிநியாக மூத்த தலைவர்களைப் பார்த்து நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நம்முடைய அடுத்த தலைமுறை நம்முடைய எதிர்காலத்தினுடைய அரசியல் விதியைத் தீர்மானிக்கப் போகின்றவர்களாக இன்று அரசியல் செல்நெறிப் பாதையில் தம்மை உட்படுத்தியிருக்கக்கூடிய இளைஞர்கள் இங்கிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுள் அனேகமானவர்கள் ஆற்றல், அறிவு, மொழிப்புலமை மற்றும் பல்வேறு விடயங்களில் சற்று பின்னடைவாக இருக்கின்ற கசப்பான உண்மையை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
ஆனால் அவர்களை பல்துறை சார்ந்தவர்களாக மொழியாற்றல் மிக்கவர்களாக உலக அந்தஸ்த்துக்கும் உலகத் தரத்துக்கும் சர்வதேச பிரதிநிதிகளோடு உரையாடத்தக்க வல்லமைமிக்கவர்களாக, அறிவுசார்ந்தும், அனுபவம் சார்ந்தும், ஆற்றல் சார்ந்தும் வளர்த்தெடுக்கவேண்டியதும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியதும் நம்முடைய மூத்த தலைவர்களுடைய கடமையாகும். எனவே அரசியல் தலைமைகளாக நிமிர இருக்கின்ற நம்மைப்போன்ற இளைய அரசியல் தலைமைகளுக்கும் தமிழ்த்தேசிய அரசியலுக்குள் பயணிக்கின்ற இளைஞர்களுக்கும் அத்தகைய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோளாகும்.
அதற்கும் அப்பால் இன்றைக்கு தமிழர்களிடம் இருக்கக்கூடிய பல கட்சிப் பிரதிநிதிதித்துவத்திற்குள் நம்முடைய இளைஞர்கள் சிதறிப்போய் இருக்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் அந்த இளைஞர்களின் வல்லமைகளினால்தான் பல விடயங்கள் சாதிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. நான் இங்கிருக்கும் தலைவர்களைப் பார்த்து ஒன்றைக் கூறிக்கொள்கின்றேன். எல்லோருக்கும் மேலாக இருக்கின்ற கடவுளைப் பார்த்து “தந்தை செல்வா சொன்னதுபோல இந்த தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என்ற வாக்கியத்தை நினைவுகூர்ந்து எல்லோருக்கும் பொதுவான இறையருளை இறைஞ்சுகின்றேன். இங்கே திசைமாறி, இலக்குமாறி, திக்குமாறி நிற்கக்கூடிய அத்தனை ஆற்றல்மிக்க, உணர்வுமிக்க அத்தனை தமிழ்த்தேசிய பற்றுள்ள இளைஞர்களும் ஒரு அணியின் கீழ், ஒரு குடையின் கீழ், ஒரு தலைமைத்துவத்தின் கீழ் திரண்டுநின்று தமிழ் மக்களுடைய இந்த உரிமைப் போராட்டத்தை, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்லுகின்ற அந்த வாய்ப்பை இறையருள் ஏற்படுத்தவேண்டும் என்பது எனது பிரார்த்தனை ஆகும். மாறாக ஆயுதப் போராட்டத்தில் சிதறிப் போய் சின்னாபின்னமாகி சகோதரப் படுகொலைகளால் கெட்டழிந்தது போல மீண்டும் ஒரு தடவை எங்கள் இளைஞர்களின் பலம் வீணடிக்கப்பட்டுவிடக்கூடாது. தனிப்பட்டவர்களின் அரசியல் இருப்பை முன்னிறுத்தாது இனத்தின் இருப்பை முன்னிறுத்தும் இதயம் எங்கள் இளைய தலைமுறை அரசியல்தலைவர்களிடம் தானும் வளரட்டும்.
நிறைவாக இந்தப் அரிய அஸஷரிய தருணத்திலே என்னுடைய கருத்துக்களையும் பகிர்வதற்காக ஒரு வாய்ப்புத்தந்து தமிழ்த்தேசிய அரசியலில் இளைஞர்களுடைய பங்களிப்பு தொடர்பாக கனதியான வரலாற்றுப் பதிவுகளையும் அதிலிருக்கக்கூடிய காத்திரமான விடயங்களையும் எதிர்காலம் நோக்கிய பயணத்தில் நாம் சிந்திக்கவேண்டிய அது தொடர்பான சில திட்டங்களையும் எடுத்துச்சொல்ல வாய்ப்புத்தந்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
“குருதியில் சிவந்த மண், உறுதியில் உறைந்த மண்
சகதியாய் மாறவோ வாலிபர் தூங்கவோ”
– எழுவோம் வாரீர் –