தமிழரசுக்கட்சியின் ஆசனப்பங்கீட்டில் இழுபறி 2 பிரதேசசபை உறுப்பினர்கள் இராஜினாமா மிரட்டல்?

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுகட்சியின் சார்பில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பிலான இறுபறிகளின் தொடராக தமிழரசுக்கட்சியின் மூத்த தூண்களாக கருதப்படுகின்றவர்களில் ஒருவர் கட்சிஅங்கத்துவத்திலிருந்து விலகியிருப்பதாகவும் மற்றொருவர் விலகுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.அவ்வகையில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்பதன் பின்னணியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பொ.கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து வரும் பிரதே சபை அங்கத்தவர் பதவி என்பவற்றை இன்று ராஜினாமாச்செய்துள்ளார்.

மற்றொரு அங்கத்தவரான குலநாயகமும் ராஜினாமாச் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மாவை சேனாதிராசாவின் வலது இடது கரங்களான இத்தரப்புக்களது ராஜினாமாவை மாவை ஏற்றுக்கொள்வாரா என்பது தெளிவாகவில்லை.

பின்னதாக கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் அவர்கள் இருவரும் தமது முடிவை கடிதம் மூலம் மாவைசேனாதிராஜாவுக்கு அனுப்பிவைத்திருப்பதாக தெரிகிறது. பதவிவிலகல் தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லையெனவும் தெரிகிறது.

இதனிடையே தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவிற்கான தலைவரான பேராசிரியர் சிற்றம்பலம் சீ.வி,கே சிவஞானம் போன்றவர்களையும் பட்டியலிலிருந்து விலக்க ஆலோசனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே ந.வித்தியாதரனுக்கு ஆசனத்தை ஒதுக்க கட்சியின் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதேவேளை ஐக்கியதேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவதற்கான முனைப்பிலும் அவர் ஈடுபட்டிருக்கிறர் என்று இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டிருக்கினற போதிலும் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை கூட்டமைப்பின் வேட்பு மனுக்களை வடக்கின் ஜந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாகவும் முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரனும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரா.சம்பந்தன் சில நாட்களிற்கு வடக்கில் தங்கி நின்று பிரச்சாரங்களினில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது..

Related Posts