ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பின் வடமேற்குப் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.
தமிழகம் – புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்திய ரோலர் படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த மீனவர்களை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை ஸ்ரீலங்கா கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 68 தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்ட 105 மீனவப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்திய கடல் எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்ட 9 ஸ்ரீலங்கா மீனவர்கள் அந்நாட்டு சிறையில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.