வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபையினால் சேர்க்கப்பட்டுவரும் நிதி உரிய காலத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கையளிக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு வடக்கு மாகாண சபையின் வெள்ள நிவாரண உதவிகளை ஏற்காது என வெளிவந்த செய்திகள் உண்மைக்கு மாறானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர்.
இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக வடக்கு மாகாண சபை வங்கி கணக்கொன்றினை ஆரம்பித்து அதனூடாக பணத்தைதிரட்டி வருகின்றது.
இதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பூரண ஆதரவினை வழங்கி வருகின்றனர். வட க்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் 38 பேரின் பங்களிப்பில் மட்டும் நான்கரை இலட்சம் ரூபாய் வெள்ள நிவாரணத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சேர்க்கப்படும் நிதி எதிர்வரும் 31ஆம் திகதி அன்று தமிழக அரசிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்நிதி கையளிப்பு முக்கியஸ்தர் ஒருவர் ஊடாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் நேரடியாக கையளிக்கப்படவுள்ளது அல்லது தமிழக முதலமைச்சரின் கணக்கிலக்கத்திற்கு அனுப்பப்படும்.
தமிழக மக்கள் எமது உரிமைக்காகவும், எம்மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் போதும் எமக்காக குரல் கொடுத்தவர்கள். அந்த வகையில் எமது தமிழ் மக்களின் உதவி என்பது அவசியமாகும்.
குறிப்பாக வடக்கு மாகாண சபையின் உதவி என்பது ஒட்டு மொத்த ஈழத்தமிழ் மக்களின் உதவியாக இருக்கும். அதனையே நாம் மேற்கொள்கின்றோம் என்றார் அவை த்தலைவர் சிவஞானம்.