தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! நல்லூரில் அணிதிரள அழைப்பு!

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை நேற்று காலை பொலிஸார் கைது செய்தனர்.

இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய். பீட்டாவை தடை செய். எங்கள் கலாச்சாரத்தை அழிக்காதே.

தமிழ் நாடு தனிநாடாகும் போன்ற கோசங்களை எழுப்பி மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்களும் இருக்கிறோம் என்று கூறி யாழ் இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

”தமிழ் மரபினை காக்கப் போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கவனயீர்ப்பு” என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை நான்கு மணிக்கு யாழ். நல்லூரில் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக கூடியிருக்கும் இவ்வேளையில், ஈழத்தமிழர்களின் சார்பில் பூரண ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்று திரண்டு நல்லூருக்கு வாருங்கள் என இளைஞர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

Related Posts