தமிழக கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு!

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் ஜீன்ஸ், பெண்கள் ஸ்கர்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அந்த வழக்கில் கடந்த நவம்பர் 26-ந் தேதி நீதிபதி வைத்தியநாதன் அதிரடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

அதில், தமிழகத்தில் இந்து கோவிலுக்குள் வரும் ஆண்கள் மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

இந்த ஆடைக் கட்டுப்பாட்டை ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 11-12-15 தேதி இந்துசமய அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், திருக்கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, அந்தந்தக் கோவில்களின் பழக்க வழக்க முறைகளின்படியும், ஆகம விதிகளின்படியும், பக்தர்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்து அந்தந்த கோவில்களின் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும்.

அந்த முடிவை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாரம்பரிய உடை அணிந்துகொள்ளாமல் கோவிலுக்குள் நுழையக் கூடாது என கூறப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கையை அடுத்து இந்து கோவில்களில் பக்தர்கள் என்னென்ன உடை அணிந்து வர வேண்டும் என்கிற அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இன்று காலை முதல் இந்த ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அறிவிப்பு பதாகை 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பின்பற்றாத பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்களிலும் உடை கட்டுப்பாடுகள் குறித்து ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் அரை டவுசர், இறுக்கமான ஆடைகளை அணிந்தபடி வந்திருந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாரம்பரிய உடைகள் அணிந்து வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

பழனி….

இதேபோல் பழனி முருகன் கோவில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகியவற்றிலும் ஆடை கட்டுப்பாடுகள் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

தமிழக கோவில்களில் 90%க்கும் அதிகமானோர் இன்று பாரம்பரிய உடைகளையே அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts