தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்கள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த மருந்தகங்களில் 10 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.
தற்போது மக்களுக்குத் தேவையான மருந்துகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார்.
அதில், ‘விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக 297 அம்மா உணவகங்களைத் தொடங்கி நடத்துவதுடன், அம்மா குடிநீர்த் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் ஒரு முன்முயற்சியாக ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதிதாகத் தொடங்கப்படும்.
இதற்கென ரூ.20 கோடி செலவிடப்படும்” என்று கூறினார். கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் மருந்தகங்களில் ஆங்கில மருந்துகள் ஏற்கனவே விற்பனை வரி நீங்கலாக விற்பனை செய்யப்படுகின்றன.
அதுபோல் அம்மா மருந்தகங்கள் மூலம் விற்கப்படும் மருந்துகளுக்கு 10 சதவீத விலை தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது. அம்மா மருந்தகங்களை நாளை (26-ந் தேதி) முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரென்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.
முதன்முதலாக சென்னையில் நங்கநல்லூர் உட்பட 20 இடங்களிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 80 இடங்களிலும் அம்மா மருந்தகங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.