தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.கவின் ஆட்சியே!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புத் தகவல் தெரிவிக்கிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த மாநிலங்களில் இந்தியா டிவியும், சி-வோட்டர்ஸ் அமைப்பும் இணைந்து மார்ச் மாதம் 4ஆவது வாரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தின.

அந்த கருத்துக் கணிப்பு முடிவில், தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 130 இல் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘இந்தியா’ தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையைப் பெறும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 70 இடங்களைப் பிடிக்கும். பிற கட்சிகள் 34 இடங்களைப் பெறும்.

அதேசமயம், கடந்த தேர்தல்களில் 51.9 சதவீதமாக இருந்த அதிமுகவின் வாக்கு விகிதம் தற்போது 39.1ஆக சரியலாம். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் வாக்குவிகிதமும், 39.5 சதவீதத்தில் இருந்து 31.8ஆக குறையலாம். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியின் வாக்கு விகிதம், 2.2 சதவீதத்தில் இருந்து 4.1 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கேரளம்: கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணி 86 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணிக்கு 53 இடங்களே கிடைக்கும். பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஓரேயொரு இடம் மட்டுமே கிடைக்கும்.

இடதுசாரிக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 0.2 சதவீதம் உயர்ந்து, 43.8 சதவீதமாக அதிகரிக்கும். காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு விகிதம் 45.8 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதம் குறைந்து, 41.3ஆக இருக்கும்.

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 160இல் வெற்றி பெறும். முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராவார். முந்தைய தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்ற 184 இடங்களுடன் ஒப்பிடுகையில், இது 24 இடங்கள் குறைவாகும்.

இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கு, 127 இடங்கள் கிடைக்கும். இடதுசாரிகள் 106 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் வெற்றி பெறுவர். முந்தைய தேர்தலில் இடதுசாரிகள் 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். காங்கிரஸ் 42 இடங்களை வென்றிருந்தது. வரும் தேர்தலில், பாஜக 4 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெறும்.

அஸ்ஸாமில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 55 இடங்களில் வெற்றி பெறும். இது ஆட்சியமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை இடங்களுடன் ஒப்பிடுகையில் 9 இடங்கள் குறைவாகும்.

முதல்வர் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸுக்கு 53 இடங்கள் கிடைக்கும். பக்ரூதீன் அஜ்மலின் அனைத்து இந்தியா ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 12 இடங்களும், பிற கட்சியினருக்கு 6 இடங்களும் கிடைக்கும்.

மொத்தத்தில், அஸாமில் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது. தொங்கு பேரவையே அமையும் என்று கருத்துக்கணிப்பு தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts