தமிழகத்தில் மார்ச் முதல் பெப்சி, கோக் விற்கப்படாது!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. அடுத்து சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வரப்பட்டு அது ஒருமனதாக நிறைவேறியது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக நீங்கியது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.

இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா விழுப்புரத்தில் அளித்த பேட்டியில் ”மார்ச் 1-ம் திகதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Related Posts