Ad Widget

தமிழகத்தில் செல்வம் அடைக்கலநாதன் வீட்டுக்காவலில்!!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அரசியல் ரீதியான பயணமாக கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அந்த வேலைகளை முடித்துக்கொண்டு தனிப்பட்ட பயணமாக தமிழ்நாட்டிற்கு சென்றபோதே இச்சம்பவம் நாடைபெற்றுள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போதே முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். திருச்சி கே.கே.நகரில் உள்ள வீட்டிற்கு சென்றபோதுதான் பாதுகாப்பு என்ற போர்வையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட விடயத்தை அவர் உணர்ந்துள்ளார்.

வீட்டின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் சிறப்பு காவல்படையைச் சேர்ந்த காவலர்கள் குவிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் அது குறித்து வினவியுள்ளார். மருத்துவ பரிசோதனை முடித்து குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் நோக்கில் திருச்சி வந்துள்ளதாக கூறி இந்த பாதுகாப்பு மன உளைச்சலை ஏற்படுத்துவதனால் அதனை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் இருந்து திருச்சி மாவட்ட காவல் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையிலேயேதான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறி விலக்கிக்கொள்ள மறுத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் ரீதியான சந்திப்புக்களையும் ஊடக சந்திப்புக்களையும் தவிர்க்கும் நோக்கிலேயே இவ்வாறு பாதுகாப்பு என்ற போர்வையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் பா.உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.

செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வகித்துவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் என்ற பதவியானது அதிகாரம் உள்ள பதவிநிலையாக இருந்த போதிலும் இலங்கை அரசியலில் சனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சபாநாயகருக்கு அடுத்ததாக உள்ள அவரை இவ்வாறு வீட்டுக்காவலில் முடக்கிவைத்திருந்தமை இந்தியாவின் அதிகார அத்துமீறலின் வெளிப்பாடே என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts