மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

“உறவுக்குக் கைகொடுப்போம்.” என்ற தலைப்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு :

ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லப்படுகின்ற தாய்த் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அத்தனை உறவுகளின் துயரத்தில் பங்கெடுத்து, மானசீகமாக அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்பதற்கு யாழ்ப்பாண றோட்டறிக் கழகம் தீர்மானித்திருக்கிறது.

எமது பிரதேசத்தில், குறிப்பாக வடக்கு – கிழக்கு பகுதிகளில் யுத்தப் பேரவலத்தின் போதும், போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் எமக்காக – எமது மக்களுக்காக தமிழக உறவுகள் ஆற்றிய பணி சொல்லும் வகையன்று.

மிக அண்மையில் கூட வடக்கு – கிழக்கு பகுதிகளில் போரினால் அவயவங்களை இழந்தவர்களுக்காக எதுவித கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளாமல் 750 செயற்கைக் கால்களைப் பொருத்துவதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த றோட்டறி உறவுகள் முன்வந்து அதற்கான ஆரம்ப கட்டப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.

எனவே தமிழர்கள் என்பதில் நாங்கள் வேறு அவர்கள் வேறல்ல. செய்வது சிறிதாயினும், நாங்கள் இடர்வேளைகளில் துணை நிற்போம் என்று மானசீகமாக வெளிப்படுத்துவதற்கான ஒரு அடையாளமாகக் கூட இந்த முயற்சியை நோக்கலாம்.

அந்த வகையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள சென்னை மாநரிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தின் பின்னான காலப்பகுதியில் ஏற்படக் கூடிய சுகாதார அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் வகையில் ஆரம்ப சுகாதார மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கு எமது கழகம் தீர்மானித்துள்ளது.

சென்னையிலுள்ள எமது சகோதர றோட்டறிக் கழகங்களுடன் எமது கழகம் தொடர்பு கொண்டு அறிந்ததன் பிரகாரம், வெள்ள அனர்த்தத்தின் பின்னரான தொற்று நோய், சுவாச நோய் அபாயங்களே முதன்மையானவை என்று அறிய வருகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து வைத்திய நிபுணர்கள் அணி ஒன்றினை அனுப்பி, மருத்துவ முகாம்கள் நடாத்தப்படவுள்ளன.

இந்தச் செயற்றிட்டத்துக்காக – எம்முடன் இணைந்து பணியாற்ற  தன்னார்வ வைத்தியர்களை எமது கழகம் எதிர்பார்க்கின்றது. அத்துடன் மருத்துவ முகாம் ஏற்பாடுகள், மற்றும் மருந்துப் பொருட்களுக்கான நிதியுதவியையும் நாடி நிற்கின்றது.

Project Account: 
Rotary Club of Jaffna – CMC
101000444217
NDB Bank – Jaffna

தொப்புள் கொடி உறவுகளுக்காகத் தோள் கொடுக்கும் என்னத பணியில் இணைவதற்காக அனைவரதும் ஒத்துழைப்பை நாடி நிற்கிறது என்று உள்ளது.

Related Posts