தமிழகத்தில் ஈழ அகதி தீக்குளிக்க முயற்சி

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான சக்தி மகன் மனோஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்ற குறித்த ஈழ அகதி ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் அதில் பணம் எடுத்த 16 பேர் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மண்டபம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதிலும் இதுவரை பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த மனோஜ் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைக்க முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதுடன், கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts