தமிழகத்தில் இலங்கைத் தமிழர் குத்திக் கொலை

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). இலங்கை தமிழரான இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருவதோடு வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்களையும் அனுப்பி வருகிறார்.

இவருக்கு பிரம்மகுமாரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பிரம்மகுமாரி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது குழந்தைகளுடன் சென்றுவிட்டதால் செல்வேந்திரன் மட்டும் இரவு 11.30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார்.

சிறிது நேரத்தில் செல்வேந்திரன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தபோது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி செல்வேந்திரன் கிடந்தார்.

இதற்கிடையே அங்கு வந்த பிரம்மகுமாரி மற்றும் அவரது குழந்தைகளும் கத்தி குத்துகளுடன் உயிருக்கு போராடியபடி கிடந்த செல்வேந்திரனை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணி அளவில் செல்வேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செசன்ஸ் கோர்ட் பொலிசார் செல்வேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான பொலிசார் விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த இருவரிடம் பணம் வாங்கி கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்பாமல் இழுத்தடித்து வந்ததால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் செல்வேந்திரனை கொலை செய்தது முதல்கட்ட விசாரணயில் தெரிய வந்தது என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது மட்டும் தான் செல்வேந்தின் கொலைக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

Related Posts