தமிழகத்தில் இரு மாணவிகள் மீது அமில வீச்சு

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலத்தில் உள்ள சின்ன பூலாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த மீனா, அங்காள ஈஸ்வரி ஆகிய மாணவிகள் இரண்டு பேரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் படித்துவந்தனர்.

நேற்று அவர்கள் கல்லூரியிலிருந்து வேறு சில மாணவிகளுடன் சேர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இந்த இரண்டு மாணவிகள் மீதும் அமிலத்தை வீசிவிட்டு ஓடியுள்ளார்.

இந்த அமில வீச்சில் மீனா என்ற மாணவிக்கு 25-30 சதவீத காயமும் அங்காள பரமேஸ்வரி என்ற மாணவிக்கு 13-15 சதவீத காயமும் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்தபோது உடன் இருந்த மாணவி, முன்பின் தெரியாத நபர் அருகில் வந்து அமிலத்தை வீசியதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்கள் மீது வீரியம் குறைந்த அமிலம் வீசப்பட்டிருப்பதாகவும் அது எந்த வகை அமிலம் என்பதை அறிவதற்காக வேதியியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.

குற்றவாளியைப் பிடிக்க மதுரை மாவட்டக் காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்திருக்கிறது.

அமிலம் வீசப்படும்போது, வழக்கமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆனால், இந்த மாணவிகளுக்கு இந்த மாணவிகளுக்கு அப்படி பாதிப்பு ஏதும் இல்லை என்றும் இவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, புதுச்சேரியில் வினோதினி என்ற பெண் மீது அமிலம் வீசப்பட்டது. இதில் காயமடைந்த அந்தப் பெண் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி மரணமடைந்தார். 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் ஒரு பெண் மீது அமிலம் வீசப்பட்டது. இதில் அந்தப் பெண் காயமடைந்தார்.

தென்மாவட்டங்களில் இப்படி அமில வீச்சு சம்பவங்கள் நடப்பது இதுவே முதல் முறையென காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு உரிய நபர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Related Posts