தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை 40 கிலோகிராம் நிறையுடைய பொருட்களை மாத்திரமே விமானத்தின் மூலம் கொண்டு வர முடிந்தது. தற்போது 20 கிலோகிராம் பொருட்களை அவர்கள் மேலதிகமாக கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இவர்கள் 60 கிலோ கிராம் வரையான பொருட்களை எடுத்து வரமுடியும்.
கடல்மார்க்கமாக பயணிக்கக் கூடிய வசதிகள் நிறுத்தப்பட்ட பின்னர், தங்கள் வசம் இருந்த பாரிய நிறையுடைய குளிர்சாதனப் பெட்டி, மோட்டார் சைக்கிள் போன்ற பொருட்களை எடுத்து வருவதில் அகதிகளுக்கு சிக்கல்நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்நாட்டில் பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த 26 இலங்கை அகதிகள் நேற்றையதினம் தாயகம் திரும்பியுள்ளனர்.