தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரு இலங்கையர்கள் கைது !

பட்டுக்கோட்டை கடல் பகுதியில், உரிய அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்த கியூ பிரிவு பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் கடல் பகுதியில், இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்றும், அதில் இரண்டு இளைஞர்கள் இருப்பதையும் அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் கியூ பிரிவு பொலிசார், அந்த படகையும் அதில் இருந்த இரண்டு இளைஞர்களையும் அதிராம்பட்டினம் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அவர்களிடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த 2 இளைஞர்களும் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியைச் சேர்ந்த சுதாகர் (26) மற்றும் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ரோஷன் (30) எனவும், மீன்பிடிக்க வந்தபோது இயந்திரம் பழுதானதால் இரண்டு தினங்களாக கடலில் தத்தளித்த படகு இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம் எந்தவித அடையாள அட்டையும் இல்லாததால், உண்மையில் அவர்கள் மீன்பிடிக்க வந்தவர்கள் தானா..?, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இங்கு வந்தார்களா..?, அவர்களுக்கு இங்கு யாருடனாவது தொடர்பு உள்ளதா..? என்பது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts