தபால் மூல வாக்கு பதிவின் போது பிரசாரம் மேற்கொண்டதாக முறைப்பாடு

postal-voteதபால் மூல வாக்களிப்பின் போது, கட்சி வேட்பாளர் ஒருவரினால் பிரச்சாரம் மேற்கொண்டதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்கு பதிவு நேற்று திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கோண்டாவில் டிப்போவில் ஒரு அறையில் தபால் மூல வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது, அதேசமயம், அடுத்த அறையில் கட்சியின் வேட்பாளர் ஒருவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இத்தகவல் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோண்டாவில் டிப்போவிற்கு சென்ற யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள், வேட்பாளரை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாமென்று கூறி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

வாக்காளர்கள் சுயாதீனமாகவும், சரியாகவும் வாக்களிக்கும் போது கட்சியின் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாமென்றும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் அலுவலகங்களில், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், மேற்பார்வையிலும் ஈடுபட்டுள்ளதாகவும், அத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள முப்படை தலைமையகங்களிலும் வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அங்கும், யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் முழு நேர மேற்பார்வையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் மேலும் கூறினர்.

Related Posts