ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் தபால் மூல வாக்காளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன கருத்தை கூறியிருக்கிறார்கள். தபால் மூலமான வாக்களிப்பு முடிந்த பின்னர் கருத்து தெரிவித்து என்ன பயன். எனவே கூட்டமைப்பின் முடிவுக்கு காத்திருக்கவேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, திங்கட்கிழமை (22) தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் மாறி மாறி வந்த அரசாங்கம் எமது பிரச்சினைகளை தீர்க்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவும் அதனை செய்யவில்லை.
தற்போது தேர்தலில் போட்டியிடும், எதிரணியில், மாறுபட்ட பல்வேறு கருத்துக்களை உடைய கட்சிகளின் 10 கருத்துக்கள் ஒற்றுபட்டதாக இருக்கின்றது. அவை சர்வதிகாரத்தை எதிர்கின்றனவாக இருக்கின்றது.
பல கட்சிகளின் ஒரே குறிக்கோள் ஜனநாயகத்தை கொண்டு வருவதும், சமமாக நாம் வாழ வேண்டும் என்பதும் ஆகும். இவை எமக்கு சாதகமாக இருக்கின்றது. எனவே நான் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன்.
முட்டாள்தனமான யோசனைகளை கூறி தமிழ் மக்களை, கூட்டமைப்பினர் ஏமாற்ற வேண்டாம். மக்களை அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க விடுங்கள். கூட்டமைப்பினர் ஒவ்வொரு நாட்களும் கூட்டம் கூடி முடிவெடுக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு தேவையான தீர்மானங்களை எடுக்கிறார்களா? என்பது சந்தேகம்.
தமிழ் மக்கள் நிதானமான செயற்பட வேண்டும். எது உங்களுக்கு சரியாக தோன்றுகின்றதோ அதை செய்யுங்கள். அப்போது தான் அரச மாற்றத்தில் நல்ல பயனை பெற முடியும் என அவர் தெரிவித்தார்.