தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகார்! வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு சாதனை படைக்கும்!!

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு விலைபோய் தமிழ்த் தேசியத்தை – தமிழ்க் கூட்டமைப்பை சிதைக்கமாட்டார்கள். வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமடையச் செய்வார்கள். கடந்த தேர்தல்கள் இவற்றுக்கு உதாரணங்களாக உள்ளன. இதனை அனைவரும் உணரவேண்டும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று தமிழர் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறியிருக்கின்றது. எமது மக்களுக்கிடையிலான ஒற்றுமையாலும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த தேர்தல்களில் வழங்கிய பலத்தாலுமே தமிழர் பிரச்சினை உலக அரங்கில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இன்று சர்வதேச நாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணுங்கள் என்று இலங்கை அரசை வலியுறுத்துகின்றன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி கூட்டமைப்புக்கான அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தும் செயற்பாடுகளை தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.

இதனை வெளிப்படுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எமது மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது ஏகோபித்த கட்சியாக கடந்த தேர்தல்களில் மாற்றியிருக்கும் எமது வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு 20 ஆசனங்களைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு.

பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் ஆட்சிமுறை ஏற்படவேண்டும் என்று நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

அத்துடன், திட்டமிட்டுப் பிரிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்றும் நாம் கோரியிருக்கின்றோம். இது எமது திடமான – உறுதியான நிலைப்பாடு. இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.

இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். நாடு பிரிக்கப்படாமல் – நாடு பிளவுபடாமல் தமிழர்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்துடைய பிரஜைகளாக, பாதுகாப்பாக சகல உரிமைகளுடனும் மரியாதையுடனும் தமது தேவைகளை நிறைவேற்றி வாழ வழி ஏற்படுத்தவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின்படி நாம் எமது சுயநிர்ணய உரிமையைக் கேட்கிறோம்.

தனியான கலாசாரம், பண்பாடுகளைக்கொண்ட தனித்துவமான இனம் என்ற ரீதியில் சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து எமக்கு உண்டு. அதனைத்தான் நாம் கேட்கின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் எதிர்கால நலன் சார்ந்ததாக உள்ளது.

எனவே, எமது மக்கள் எதிர்வரும் 17ஆம் திகதி ‘வீடு’ சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சாதனையடைச் செய்வார்கள்” – என்றார்.

Related Posts