தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் நடிகர் தனுஷ்.தன்னுடைய நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர் நீச்சல்’ என்ற படத்தை எடுத்து அவரை ஒரு தனிப்பட்ட கமர்ஷியல் ஹீரோவாகவும் நிலை நிறுத்தினார் தனுஷ்.
தொடர்ந்து வந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் மாபெரும் வெற்றி பெற முன்னணிக்கு வந்தார் சிவகார்த்திகேயன். அந்த சமயத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த எந்தப் படங்களும் வெற்றி பெறாத நிலையில், தனுஷ் தானாகவே அவருடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுக் கொடுப்பதாக பலரும் நினைத்தனர்.
இருந்தாலும் தற்போது வரை சிவகார்த்திகேயனை வைத்து ‘காக்கிச் சட்டை’ படம் வரை அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
இதனிடையே விநாயகர் சதுர்த்தியன்று தனுஷ் அவருடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
அப்படத்தின் அறிவிப்பைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தவர் சிவகார்த்திகேயன்தான் என்கிறார்கள். தனுஷ் என்ன செய்தாலும் அதைப் பாராட்டி, வாழ்த்தி தன்னுடைய டுவிட்டரில் செய்தி வெளியிடும் சிவகார்த்திகேயன் இதுவரை ‘நானும் ரவுடிதான்’ படத்தை வாழ்த்தி எந்த செய்தியையும் வெளியிடாததை அவர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
அன்றைய தினம் ரஜினியின் ‘லிங்கா’ முதல் பார்வைக்கெல்லாம் வாழ்த்துகளைப் பதிவிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும், சிவகார்த்திகேயனுக்கு நீண்ட நாட்களாகவே நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையாம். அந்த ஆசை விஜய் சேதுபதிக்கும் இருந்தது என்பது விஜய் விருதுகள் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தனுஷ், சிவகார்த்திகேயனை முழுமையாக ஓரம் கட்ட முடிவு செய்துவிட்டாராம். அதன் எதிரொலிதான் விஜய்சேதுபதியை தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைப்பது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
சில வாரங்களுக்கு முன் கூட ஒரு பத்திரிகையாளரிடம் பிரசுரிக்க வேண்டாமென்று சொல்லி சில விஷயங்களை தனுஷ் சொன்னதையும் அவர்கள் கணக்குப் போட்டுப் பாருங்கள், எல்லாம் சரியாக இருக்கும் என்கிறார்கள்.