தனுஷ் அனிருத்தின் 4 வருடக் கூட்டணி முடிவிற்கு வந்ததா?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் நடிக்கும் கொடி படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் தனுஷ்.

dhanush-anirudh

ஏற்கனவே இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ்.

இதனால் தனுஷ் – அனிருத்தின் 4 வருடக் கூட்டணி முடிவிற்கு வந்ததா? என்ற கேள்வி தமிழ்த்திரையுலகில் எழுந்துள்ளது.

ஐஸ்வர்யா தனுஷின் உறவினரான அனிருத் அவரது இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

படம் பெரியளவில் வெற்றி பெறாவிடினும் கூட பாடல்கள் மாபெரும் ஹிட் பாடல்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றன. குறிப்பாக கொலைவெறி பாடல் உலகளவில் சாதனை புரிந்தது.

தொடர்ந்து தனுஷின் வேலை இல்லாப் பட்டதாரி, மாரி மற்றும் சமீபத்தில் வெளியான தங்கமகன் போன்ற படங்களில் அனிருத்திற்கு வாய்ப்பு கொடுத்தார் தனுஷ்.

மேலும் தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான் படங்களும் அனிருத் இசையமைப்பிலேயே வெளியாகின.

இவர்களின் கூட்டணியில் வெளியான எல்லாப் படங்களின் பாடல்களும் ஹிட்டடித்ததில் இந்தக் கூட்டணிக்கு தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக தனுஷின் தயாரிப்பில் படம் இயக்குகிறார் துரை செந்தில்குமார்.

முதல் 2 படங்களிலும் சிவகார்த்திகேயனை இயக்கிய செந்தில்குமார் இந்தப் படத்தில் தனுஷை முதன்முறையாக இயக்குகிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் அனிருத்தை கழட்டிவிட்டு தற்போது சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறது கொடி படக்குழு. “இன்றுமுதல் கொடி படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி” என்று தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் பிரிந்ததற்கு அனிருத் தான் காரணம் என்று தமிழ்த் திரையுலகில் கிசுகிசுக்கப் படுகிறது.இவர் பிற நடிகர்களின் படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனுஷ் படங்களுக்கு கொடுக்காததால் தான் தனுஷ் இந்த முடிவிற்கு வந்தார் என்று கூறுகின்றனர்.

ஆனால் பீப் பாடல் விவகாரத்தில் தனுஷின் தங்கமகன் படத்திற்கு சிக்கல் வந்தபோதே அனிருத்தைக் கழட்டி விடும் முடிவிற்கு தனுஷ் வந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் மணிரத்னம்-இளையராஜா, செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா, கவுதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி உடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது தனுஷ் – அனிருத் கூட்டணியும் முடிவிற்கு வந்துள்ளது. இதில் கவுதம் மேனன் – ஹாரிஸ் கூட்டணி மட்டுமே மீண்டும் இணைந்தது.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தான் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கும் அனிருத்,அதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இதே போல முன்னதாக தனுஷ் – சிவகார்த்திகேயன் கூட்டணி உடைந்தது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு அவர் வளர்ந்து விட்டதுதான் தங்களது பிரிவிற்கு காரணம் என்று தனுஷ் கூறியிருந்தார். தற்போது அனிருத்திற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

Related Posts