சிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய பனிப்போர் நடந்ததை நாடறியும்! குறிப்பாக, ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்த பிறகு சிம்பு தனுஷ் சண்டை உச்சத்தைத் தொட்டது. சினிமா விழாக்களில் நேருக்கு நேர் சந்தித்தபோது கூட ஒரு ஹலோ கூட சொல்லிக்கொள்ளாமல் இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றனர்.
பத்திரிகை பேட்டிகளிலும் ஒருவரை ஒருவர் தாக்குவதுபோல் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் திடீரென சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதை யாரும் நம்பவே இல்லை. நம்ப வேண்டிய சூழல் வெகு விரைவிலேயே வந்தது. யெஸ்.. சிம்புவும், தனுஷும் கைகோர்த்தபடி சினிமா விழாக்களிலும் பார்ட்டிகளிலும் தென்பட்டனர்.
போதாக்குறைக்கு இருவரும் செல்ஃபி எடுத்து ட்விட்டரிலும் வெளியிட்டு வந்தனர். சிம்பு உடனான நட்பை ரஜினி குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும், அதையும் மீறி என்ன காரணத்தினாலோ சிம்பு உடன் அதீத நெருக்கத்தை காட்டுகிறார் தனுஷ் என்று திரைப்படத்துறையில் கிசுகிசு எழுந்தது. அது மட்டுமல்ல, இந்த பிரச்சனை காரணமாகவே தனுஷுக்கும் அவரது மனைவிக்கும் மன வருத்தம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் மலேஷியாவில் ஒரு விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷுக்கு விருது வழங்கினார்கள். அந்த விழாவுக்கு தனுஷ் செல்லாததினால், அவருக்கு பதில் சிம்பு பெற்றுக் கொண்டார். இந்த விஷயம் தனுஷுக்கு சொல்லப்பட்டதும் சிம்புவுக்கு போனிலேயே நன்றி சொன்னாராம். நண்பேன்டா!