தனியார் மாணவர்களும் தலைமைத்துவ பயிற்சியை கோருகின்றனர்

Leadershipதலைமைத்துவ பயிற்சியில் பங்குபெறுவதற்கு தம்மையும் அனுமதிக்குமாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் கோருவதாகவும் இதற்காக அவர்கள், பிரத்தியேக கட்டணத்தை செலுத்தவதற்கு தயாராக உள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி தொடர்பில் பல்கலைக்கழக மாணவ சங்க தலைவர் சஞ்சீவ பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அமைச்சர்  நிராகரித்துள்ளார்.

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி 23 நிலையங்களில் இடம்பெறுவதாகவும் இதில் 91.7 வீத மாணவர்கள் பங்குபற்றியுள்ளதாகவும்; அமைச்சர்; உறுதி செய்துள்ளார்.

இதேவேளை, 84 பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் இப்பயிற்சிகளை முன்னெடுத்து செல்வதுடன் ஒரு மையத்தின் பொறுப்பில் ஒரு விரிவுளையளார், ஒரு பயிற்றுனர் வீதம் தொழிற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘தலைமைத்துவ பயிற்சியானது மாணவர்களுக்கு நம்பிக்கையை தருவதாக இல்லை. இது இராணுவ பயிற்சியை போன்று உள்ளது. அரசாங்கத்தின் அரசியல் சிந்தனைகளை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

நாம் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இது கல்வி மேம்பாட்டுக்கு முரணாக உள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தப்போவதில்லை.

தலைமைத்துவ பயிற்சி குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், விரிவுரையாளர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தபோதும் இப்பயிற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்காரணமாக உடல், உள ரீதியான அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகின்றனர்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில கல்வி திட்டம் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இந்த தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுகின்றது

மாணவர்களின் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்துவதன் விளைவாக நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படவுள்ளதை இப்பயிற்சியினூடாக நாங்கள் காண்கிறோம்.

பல்கலை மாணவர்களுக்கான இராணுவ பயிற்சி மற்றும் பாடசாலை அதிபர்களுக்கான கேர்ணல் பயிற்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்’ என பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவர் பண்டார தெரிவித்திருந்தார்.

ஆங்கிலம் மற்றம் கணினி கற்கை நெறிகளை ஆரம்பிக்குமாறு நாங்கள் கோரியபோது, அதற்கு அவர், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் கற்கைள் அடுத்தவருட கல்வித்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்ததாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,

‘நாங்கள் இந்த வருடத்தில் ஆங்கிலம் மற்றும் கணினி கல்வித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இருந்தோம். ஆனால், அதனை இவ்வருடம் எம்மால் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. மாணவர்களின் பிந்திய பதிவு, மற்றும் இசெட் புள்ளி பிரச்சினைக்காரணமாக இதனை அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

தலைமைத்துவ பயிற்சிக்கு பதிலாக அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் கணினி அறிவை மாணவர்களுக்கு வழங்கினால் அது மாணவர்களின் உயர்க்கல்விக்கு வழிவகுக்கும் என பண்டார கூறியுள்ளார்.

Related Posts