தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
தனியார் பேருந்து கட்டண மறுசீரமைப்பு தொடர்பான தேசிய கொள்கை படி தனியார் பேருந்து கட்டணங்கள் நேற்று முதல் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
குறித்த திகதியில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக தனியார் பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளன செயலாளர் அர்ஜுன பிரியஞ்சித் தெரிவித்தார்.
எனினும் பேருந்து கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய நியமித்துள்ள நிபுணர்கள் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே கட்டணத்தை அதிகரிக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.
பேருந்து கட்டண மறு சீரமைப்பு தொடர்பான 12 அம்சங்களின் அடிப்படையில் 3.21 வீதமே பேருந்து கட்டணங்களை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர் இந்த அம்சங்களை மாற்றி அமைச்சரவை அனுமதியை பெற இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பேருந்து கட்டணங்களை 15 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என பேருந்து நிறுவனங்கள் சங்கம் கோரி வருகிறது.
ஆனால் தனியார் பேருந்து நிறுவனங்கள் சங்கம் அரசாங்கம் அறிவிக்கும் உயர்வை ஏற்க தயார் என அறிவித்துள்ளது.
எனினும்நா ளை முதல் முன்னெடுக்கப்படும் வேளை நிறுத்தத்தில் தமது சங்கம் பங்கேற்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.