பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம், இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ், தீப்பிடித்து எரிவதை அவதானித்த சாரதி மற்றும் அவரது குடும்பத்தார், நீர் ஊற்றி அணைக்க முயன்ற போதிலும், அது பயணிக்காத நிலையில், குறித்த பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீக்கிரையான பஸ்ஸின் உரிமையாளர் கண்டியைச் சேர்ந்தவர் எனவும் அந்த பஸ் மூலம், மயில்வாகனபுரத்திலிருந்து கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி இறக்கும் பணியை மேற்கொண்டு வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவ தினம் இரவு, தனது பணியினை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சாரதி, வீட்டுக்கு முன்னால் பஸ்ஸை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையிலேயே, அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பஸ் தீப்பற்றி எரிந்ததா? அல்லது அதற்கு தீமூட்டப்பட்டதா? என்பது தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.