தனியார் பஸ் கட்டணங்களை 6 தொடக்கம் 7 சதவிகிதம் அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்திருக்கின்றது என போக்குவரத்து அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
அதன்பிரகாரம் தற்போது 8 ரூபாவாகவுள்ள ஆகக்குறைந்த கட்டணம் 9 ரூபாவாகவும், 12 ரூபா கட்டணம் 13 ரூபாவாகவும் உயரலாம் எனவும், பஸ் உரிமையாளர்களையும் பயணிகளையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த உயர்வு அமுலுக்கு வரவுள்ளது எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனியார் பஸ் கட்டண மாற்றத்தைப் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் முன்வைத்த ஆலோசனைகள் என்பவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின் அமுலுக்கு வரும் எனவும், அதற்கு முன் உரிமையாளர்கள் தங்களது மேலதிக கருத்துகளையும் வேண்டுகோள்களையும் நிபுணர்கள் குழுவுக்கு சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்துக் கொள்கையின்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் தனியார் பஸ் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படுவது வழக்கம். 2013இல் 20 சதவிகிதத்தால் கட்டணம் உயர்த்தப்பட்டது. டீசலின் விலை குறைந்ததால் 2015இல் 8 சதவிகிதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டது. இம்முறை 15 சதவிகித உயர்வு வேண்டுமென சில பஸ் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும் 6 முதல் 7 சதவிகித அதிகரிப்புக்கே அனுமதி வழங்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.