தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27 /2 பிரகாரம் ”திஸ்ஸ ராஜமகா விகாரை”தொடர்பில் கேள்விகளை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிக்குள் ‘திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற பெயரில் விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?,
அந்த விகாரை அமைக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 20 பரப்பு காணியின் உரிமையாளர்கள் விகாரையை அகற்றி தங்களின் நிலங்களை தங்களிடம் கையளிக்குமாறு மிக நீண்டகாலமாக அமைதிவழி போராட்டம் நடத்திவருவதை அமைச்சர் அறிவரா? இவ்விகாரை அமைந்திருக்கும் காணிகள் திருத்தப்பட்டவாறாக 1950ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணி சுவிகரிப்பு சட்டத்தின் கீழ் அரசினால் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுள்ளதா?
அவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளதாயின் அது தொடர்பான வர்த்தமானி பிரசுரத்தின் இலக்கத்தினையும் என்ன நோக்கத்திற்காக கவீகரிக்கப்பட்டது என்பதனையும் அமைச்சர் அறியத்தருவாரா ஒருநோக்கத்திற்காக சுவீகரிக்கப்படும் காணியினை இன்னொரு நோக்கத்திற்காக பாவிக்க முடியாது என்பதனை அமைச்சர் அறிவாரா?
அவ்விகாரை அமைந்துள்ள காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதனை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என பல கேள்விகளை சிறீதரன் முன்வைத்தார்.
இந்த கேள்விகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஒருவார கால அவகாசம் வழங்குமாறு கோருகின்றேன். காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்றார்.