தனியார் கல்வி நிலையங்கள் இனி மாலை 6 மணி வரையே; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர்

தனியார் கல்வி நிலையங்களுக்கான நேரக்கட்டுப்பாடு தொடர்பான கூட்டம் நேற்று யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மாநகர சபை முதல்வரும் தனியார் கல்வி உரிமையாளர்களும் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டனர்.கூட்டத்தில், கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் நேர ஒழுங்கில் வரையறை விதிக்கப்படுகிறது. இதன்படி காலை 6 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையே இனி தனியார் கல்வி நிலையங்கள் இயங்க முடியும் என முதல்வர் அறிவித்தார்.

இந்த நேரக் கட்டுப்பாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் “எம்மை நம்பி வருகின்ற பிள்ளைகளை நாங்கள் அக்கறையுடன் கவனித்து வருகின்றோம். அவர்கள் சீரழிவில் ஈடுபடாது தடுப்பது, கண்காணிப்பது எமது பொறுப்பு. நேரக் கட்டுப்பாட்டு விடயத்தில் தலையிடுவதற்கு முதல்வருக்கு அதிகாரம் கிடையாது என ஆட்சேபம் தெரிவித்தனர். அத்தோடு அனைவரும் கூட்டாக முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுபட்ட கருத்தாக நேரக்கட்டுப்பாட்டை விலக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களின் கூட்டான ஆட்சேபனையை கருத்தில் எடுத்த முதல்வர், மாலை 5.30 மணியை 6.00 மணியாக மாற்றியதுடன் சில கட்டுப்பாடுகளையும் விதித்தார்.

தனியார் கல்வி நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதிசெய்தல் வேண்டும், பெண் பிள்ளைகளின் தேவைகளுக்குப் போதுமான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும், தளபாடங்கள் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட வேண்டும், காற்றோட்டமுள்ள, சுத்தமான குடிதண்ணீர் வசதி கொண்ட இடமாக கல்வி நிலையம் அமைதல் வேண்டும், கல்வி நிலையங்களுக்கு வெளியே சைக்கிள்கள் நிறுத்தப்படக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து இவற்றுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்தார்.

Related Posts