தனிப்பட்ட பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா இராமநாதன்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது அர்ச்சுனா இராமநாதன் ​​பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்திலிருந்து நகர மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில் அவர் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் இந்த சம்பவத்தினால் தாம் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதனால், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தனக்கு வழங்கப்படும் தேவையான பாதுகாப்பை எவ்வாறு, எப்போது ஏற்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடவுள்ளதாக சபையின் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

Related Posts