50 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆறுமாத மீள்நிதியிடல் வசதியை உருவாக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
கொவிட் – 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கொவிட் – 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு, கடன் மீள்செலுத்தலைப் பிற்போடுதல் (மூலதனம்+வட்டி) மற்றும் ஒரு தொழிற்படு மூலதனக் கடன் உள்ளடங்கலான ஒரு பரந்தளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்துவதென 2020.03.20இல் அமைச்சரவை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி ஓர் மீள்நிதியிடல் வசதியை உருவாக்கத் தீர்மானித்துள்ளது.
வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் (நிதி நிறுவனங்கள்) ஆகியவை 2020.03.25இல் ஆரம்பமாகும் இம் மீள்நிதியிடல் வசதியில் பங்குபற்றுவதற்குத் தகுதியானவை என்பதோடு அவை அறிவிக்கப்பட்ட சலுகைகளையும் வழங்கலாம்.