தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்து அதில் பயணம் செய்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. அவர் நடிப்பில் வெளியான படங்களில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என தேர்வு செய்து நடிக்கும் இவரை “மக்கள் செல்வன்” என்றும் அழைக்கின்றனர்.
சீனு ராமாசாமி இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
அவரது நடிப்பில் கடந்த 2015-ல் வெளியான படம் `ஆரஞ்சு மிட்டாய்’. இப்படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு வசனங்களை எழுதிய விஜய் சேதுபதி, இப்படத்தில் ஒரு 57 வயது முதியவராக நடித்திருந்தார். ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்ற இப்படம், பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்நிலையில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்றையும் விஜய் சேதுபதியே எழுதவிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது, `விக்ரம் வேதா’, `கருப்பன்’, `96′, `அநீதிக்கதைகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் `புரியாத புதிர்’ படம் தயாராகி ரிலீசாகமல் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது.