கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்றிருந்த தனது தாயாருக்கு 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய தண்ணீர்ப் போத்தலைக் கொள்வனவு செய்துள்ள நிலையில் அப் போத்தலிற்குள் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியொன்று காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த தண்ணீர்ப் போத்தல் கோண்டாவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வாகனத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தி. கிருபனால் பொறுப்பெடுக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டது.
இன்று புதன்கிழமை (02-3-2016) யாழ்.நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தண்ணீர்ப் போத்தலைக் கொள்வனவு செய்த 33 வயதான இளைஞர் கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் -6 மணியளவில் சுன்னாகத்திலுள்ள கடையொன்றில் Nature Green நிறுவன தயாரிப்பான 19 லீற்றர் தண்ணீர்ப் போத்தல் வாங்கி தெல்லிப்பழை துர்க்காபுரம் ஆயுர்வேத வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாகத் தங்கிச் சிகிச்சை பெற்று வரும் அம்மாவின் குடிநீர்த் தேவைக்காகக் கொண்டு சென்று வழங்கினோம்.
தாயார் காலை தண்ணீர் குடிப்பதற்காகப் போத்தலை எடுத்துப் பார்த்த போது அதற்குள் கரப்பான் பூச்சி இருப்பதை அவதானித்தார்.
குறிப்பிட்ட தண்ணீர்ப் போத்தலை உடைக்காமல் இது தொடர்பில் தாயார் என்னிடம் கூறினார். இந்த விடயம் பிரதேசப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்துக் குறிப்பிட்ட தண்ணீர்ப் போத்தல் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளார். என்றார்.
தண்ணீர்ப் போத்தலிற்குள் கரப்பான் பூச்சி எவ்வாறு வந்தது? என்பது தொடர்பில் தமக்குச் சந்தேகங்கள் உள்ளதாகவும், தண்ணீரில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் தெரிவித்த குடும்பத்தினர் இவ்வாறான பாதிப்புக்கள் எதிர்காலத்திலும் தொடரக் கூடாது என்பதற்காகவே தாம் இது குறித்த தகவலை வெளியிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் தண்ணீர்ப் போத்தல் பாவனை அதிகரித்து வருகின்ற நிலையில் தண்ணீர்ப் போத்தலுக்குள் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டமை தண்ணீர்ப் போத்தல்கள் மீதான தமது நம்பகத் தன்மையைக் கேள்விக் குறியாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுமக்கள் இது குறித்து உரிய விசாரணைகள் நடாத்திக் குறிப்பிட்ட நிறுவனத்தினைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.