மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் திறம்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் கமல்ஹாசனையும் தணிக்கை குழு உறுப்பினராக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோல் பிரபல இயக்குனர்கள் ஷாஜி கருன், கவுதம் கோஷ் ஆகியோரும் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிறார்கள். பிரபல டைரக்டர் ஷியாம் பெனகல் தலைமையிலான குழு கமல்ஹாசனை தணிக்கை குழு உறுப்பினராக்க சிபாரிசு செய்துள்ளது. இந்த தகவலை ஷியாம் பெனகல் தெரிவித்துள்ளார்.
ஷியாம் பெனகல் தலைமையிலான குழுவில் இடம் பெற்றுள்ள படத் தயாரிப்பாளர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா, பியாஸ் பாண்டே, சினிமா பத்திரிகையாளர் பவானி சோமையா, உள்ளிட்டோர் சமீபத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை மத்திய மந்திரி அருண்ஜெட்லியை மும்பையில் சந்தித்தனர்.
அப்போது தணிக்கை குழுவில் யார் யாரை சேர்ப்பது, எவ்வாறு மாற்றி அமைப்பது என்பது குறித்து ஆலோகிக்கப்பட்டது. கமல்ஹாசன் தென்னிந்திய சினிமாவில் முக்கியமானவர். நடிகர், படத்தயாரிப்பாளர். எனவே அவரை திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் ஆக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தணிக்கை குழு சுதந்திரமாக செயல்படும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.