தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி – சீமான் கைது!

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடையை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக அவர் மதுரை வந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்ததாக நாம் தமிழர் கட்சியின் 20 பேரை போலீசார் இன்று காலையில் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் பூதக்குடி அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த சென்ற சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டனர்.

Related Posts