தடையுத்தரவை மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் , காணிப் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையில் மேற்படி விகாரை அமைப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளில் இவ்வாறு அத்துமீறி விகாரை அமைப்பது அப்பட்டமான சட்டவிரோத செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்துத் தான் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கரைத்துறைப்பற்று பிரதேச செயலரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது:
குறித்த பிக்குவிடம் தடையுத்தரவுக்கான ஒப்புதல் ஒப்பத்தை நேரில் பெற்றார் என அவர் கூறினார் என ரவிகரன் தெரிவித்தார்.
இதேவேளை ரவிகரன் இந்த விடயம் தொடர்பாக உறுதிப்படுத்த அங்கு சென்றபோது அங்கிருந்த படையினர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி ரவிகரன் தெரிவித்த விடயங்கள் வருமாறு:
“முதலில் பிக்கு இருக்கிறார் என்று தெரிவித்து விட்டு, பின்னர் அவர் கொழும்பு சென்று விட்டார் எனக் கூறினர். இதே போன்று இன்று தாம் எந்த வேலையும் செய்யவில்லை என்று படையினர் கூறியபோதும், சற்றுமுன்னர் அங்கு கட்டுமானப்பணிக்கான கலவை பூசப்பட்டிருந்ததை நேரில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இதை நான் சுட்டிக்காட்டியபோது சிறியளவிலான வேலைகள் இடம்பெற்றது உண்மை தான் என்று படையினர் தெரிவித்தனர். மேலும் தடையுத்தரவு பற்றி பிக்கு தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் படையினர் என்னிடம் கூறினர்.
தடையுத்தரவு அதிகாரபூர்வமாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அத்துமீறுவது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தெரிவிப்பதாக மக்களிடம் கூறினேன்” – என்றார்.