தடைகளைத் தாண்டி யாழில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும் உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக பொங்குதமிழ் எழுச்சி நினைவகம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில், குறித்த நினைவாலயமானது பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை குறித்த நினைவாலயத்தில் நடத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்காக நினைவாலயமொன்று அமைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்பால் அதற்கு தடையேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts