தடுமாறுகிறது இலங்கை ; வலுவான நிலையில் இந்தியா

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அனைத்து துறைகளிலும் தடுமாறும் இலங்கை அணி பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, நேற்றய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிவருகின்றுது.

காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான நேற்று 3 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்களுடன் இந்தியா முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்திய அணி சார்பாக செட்டேஷ்வர் புஜாரா 144 ஓட்டங்களுடனும் அஜின்கியா ரஹானே 39 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் ஓரளவு ஓட்டங்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழக்க இறுதியில் அஜின்கியா ரஹானே டெஸ்ட் அரங்கில் 12 ஆவது அரைச்சதத்தை எட்ட , ரவிச்சந்திரன் அஸ்வின் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா அரைச்சதம் கடக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 600 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் நுவன் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் முதற்தடவையாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை நுவன் பிரதீப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு உபுல் தரங்க மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி ஆரம்பத்தை வழங்கியது. இலங்கை அணி 68 ஓட்டங்களுக்கு தனது முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. இருந்தாலும் நம்பிக்கை தரும் விதமாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க அரைச்சதம் கடந்து அணியை உறுதியாக்கினார்.

மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய அஞ்சலோ மத்யூஸ் 54 ஓட்டங்களுடனும் டில்ருவன் பெரேரா 06 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆட்டநேரமுடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றுது. இந்நிலையில் இன்று போட்டியின் 3 ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts