எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ். ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால் 109 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதன்போது யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றினால் 79 மீனவர்களும் யாழ். பருத்தித்துறை நீதிமன்றினால் 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகம் இராமநாதபுரம், புதுக்கோட்டை, ஜகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இம்மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதமளவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ். இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களை ஓரிரு தினங்களில் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் நடராஜன் தெரிவித்தார்.