தஞ்சக்கோரிகள் தற்கொலை முயற்சி கண்டு பணிய மாட்டோம் – ஆஸ்திரேலியப் பிரதமர்

ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்துள்ள நிலையில், “இப்படியெல்லாம் மிரட்டி” ஆஸ்திரேலிய தஞ்சக் கோரிக்கை கொள்கைகளை மாற்றிவிட முடியாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார்.

Tony-Abbott-satire

கிறிஸ்துமஸ் தீவில் தாய்மார்கள் சுமார் ஒரு டஜன் பேர், தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.

“தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு உணவு, உடுப்பு, உறைவிடம் எல்லாம் நாங்கள் ஒழுங்காக வழங்குகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். நவுருவில் வைக்கப்படுபவர்கள் எவ்விதமான தண்டனைக்கோ கஷ்டங்களுக்கோ ஆளாகப்போவதில்லை.” என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் தாய்மார்கள் சிலர், தாம் இறந்தால் தமது பிள்ளைக்காவது அகதித் தஞ்சம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ்திரேலியாவின் ஃபேர் ஃபேக்ஸ் மீடியா செய்தி வெளியிட்டதை அடுத்து பிரதமரின் இந்த பதில் வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் தீவிலிருந்து நவுருவுக்கோ, மனுஸ் தீவுகளுக்கோ கொண்டுசெல்லப்படலாம் என்று தெரியவந்ததை அடுத்து, மிகவும் கலங்கிப்போன தஞ்சக் கோரிக்கையாளர்கள், இறந்து விடுவதே நல்லது என நினைத்து தற்கொலைக்கு முயன்றதாக அவர்களது சட்டத்தரணிகளை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியா நோக்கி படகில் சென்றபோது அண்மையில் இடைமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 153 பேர் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவார்களா என்பதை பிரதமர் அப்பாட் தெளிவுபடுத்த பிரதமர் மறுத்திருந்தார்.

அவர்களைத் திருப்பியனுப்ப ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அவர்களைத் திருப்பியனுப்புவதாக இருந்தால், 72 மணி நேரத்துக்கு முன்கூட்டியே அது பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.

Related Posts