தங்கநகை அடகு முற்பணத்துக்கு அதிகூடிய மாதாந்த வட்டி ஒரு சதவீதம் – மத்திய வங்கி

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள பொருளாதார நிலமைகளைக் கருத்திற்கொண்டு தங்க நகை அடகு முற்பணத்துக்கான அதிகூடிய மாத வட்டியாக ஒரு சதவீதத்தை இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது.

இந்த புதிய வட்டிக் குறைப்புநேற்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவேண்டும் என்று அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளிடமும் இலங்கை மத்திய வங்கி கேட்டுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது.

கோவிட் – 19 பரவலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்காக தங்க நகைகளை அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

இதன்படி, 2020.04.27 ஆகிய இன்று திங்கட்கிழமை முதல் அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர் உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச வட்டி வீதமானது வருடாந்த வட்டி 12 சதவீதமாகவும் அல்லது அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டி 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதிச் சட்டக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்ந்தபட்ச வட்டி வீதம், அனைத்து புதிய அடகு முற்பணங்களுக்கும் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு இக்கட்டளையின் திகதியிலிருந்து புதுப்பிக்கப்படக்கூடிய அடகு முற்பணங்களுக்கும் உரியதாகும்.

மேலும், அடகுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஏனைய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் அவசர நிதி வசதியைப் பெறுவதற்கு ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம் பின்னர் அவர்கள் தங்களுடைய அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க முடியும் – என்றுள்ளது.

Related Posts