தகவல் வழங்கியும் பொலிஸார் வரவில்லை : மக்கள் விசனம்

நீர்வேலி, மாசியன் சந்தி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தும் பொலிஸார் அசட்டையுடன் நடந்து கொண்டதாக, பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நவக்கிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) நிகழ்வு ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரை, பொல்லால் தாக்கி விட்டு அவரது மகள் அணிந்திருந்த 1 பவுண் தங்கச்சங்கலியை குழு ஒன்று அபகரித்து சென்றுள்ளது.

இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த விமல் (வயது39) என்ற குடும்பஸ்தர் காயமடைந்து யாழ். போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், நீர்வேலி மாசியன் சந்தி பகுதியிலும் மேற்படி கொள்ளை குழு, சிறுவன் ஒருவனை அடித்து காயப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் நீர்வேலி மாசியன் சந்தி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மதுரங்கன் (வயது 14) என்ற சிறுவன் காயங்களுக்கு உள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போது, உரிய இடத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தொலைபேசி மூலம் வழங்கிய முறைப்பாட்டினை பொலிஸார் உதாசீனம் செய்துவிட்டனர் என்றும் தாம் நீண்ட நேரமாக சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

“சட்டத்தினையும் ஒழுங்கினையும் நிலை நாட்டும் பொலிஸார் இவ்வாறாகவா நடந்து கொள்வது?” என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts