‘யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் வன்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அல்லது தகவல்கள் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்’ என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று செவ்வாய்க்கிழமை (15) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
‘குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேர ரோந்து, விசேட குழு அமைப்பின் செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. இதனையும் மீறி வன்செயல்கள் இடம்பெறுகின்றன.
இவை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு தந்தால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
நேரடியாக தகவல்களை வழங்க தயங்குபவர்கள், 071-4456499 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்’ என்றார்.